1948 ஆம் ஆண்டு அருட்.ஜெ.பிரான்சிஸ் பெர்னாண்டோ அவர்கள் காலத்தில் LFRC துவக்கப்பள்ளி ஆரம்பமானது .3 ஆசிரியர்களைக் கொண்டு துவக்கப்பட்ட இப்பள்ளி அருட்.பி.சி.சாக்கோ காலத்தில் 1952 ஆம் ஆண்டு LFRC நடுநிலைப்பள்ளியாக உருப்பெற்றது. 1998ஆம் ஆண்டு அருட். ராஜசேகரனின் பெரும் முயற்சியால் LFRC உயர்நிலைப்பள்ளியானது.2018ஆம் ஆண்டு அருட்பணி L.சகாயராஜ் அவர்களால் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.LFRC பள்ளி மேல்நிலைப்பள்ளியாக மாறவேண்டுமென்ற இப்பகுதி வாழ் மக்களுடைய விருப்பத்திற்கு மறைமாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து மக்களின் கனவை நனவாக்கியது.தற்போது மேல்நிலைப்பள்ளியில் 6 நிரந்தர பணியிட ஆசிரியர்களும்,22 தொகுப்பூதிய ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.2019-2020ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பின் முதல் அணியானது அரசுப்பொதுத் தேர்வை சந்தித்துள்ளது.இதில் சுப்பையா என்ற உயிரி-கணிதவியல் பிரிவு மாணவன் 506 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றிருக்கிறான்.LFRC பள்ளியின் மற்றொரு முக்கியமான சிறப்பு என்பது முதல் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு முடிய தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவ-மாணவியர் கல்வி கற்க இயலும்.கூடுதலாக 2020-2021ஆம் கல்வியாண்டில் மழலையர் பள்ளி முறைப்படி தொடங்கப்பட்டு அதற்கான புதிய வளாகம் உருவாக்கப்பட்டு அரசு அனுமதிக்காக கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. LFRC மழலையர் பள்ளி,தொடக்கப்பள்ளி,மேல்நிலைப் பள்ளி இவை மூன்றும் ஒரே வளாகத்தில் தனித்தனி வளாகமாக பிரிக்கப்பட்டு அனைத்து வசிதிகளையும் கொண்டு நகரிலேயே சிறந்த பள்ளி என்ற பெயரை தக்கவைத்து கொண்டிருக்கின்றன.10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கடந்த 5 ஆண்டுகளாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று தனது பெருமையை நிலைநாட்டி உள்ளது.
2019-2020ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 98 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.2020-2021 ஆம் கல்வி ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலும் இந்த சுற்றுவட்டாரத்திலேயே கல்வி ஆண்டு முழுமையும் இணையவழி வகுப்புகள் நடைபெற்ற பள்ளி நம் பள்ளி மட்டும்தான் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
2021-2022 ஆம் கல்வி ஆண்டின் தொடக்கம் முதல் கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் ஜூன் மாதம் 5ஆம் தேதி முதல் இணைய வழி வகுப்புகளை தொடங்கி நடத்தி வந்தோம்.02.09.2021 ஆம் தேதி PTA செயற்குழு கூட்டம் நடைபெற்று செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளி திறந்த பின் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய SOP முறைகள் குறித்து விளக்கப்பட்டது.செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு அரசின் கொரோனா விதிகளை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.செப்டம்பர் 6ஆம் தேதி ஆசிரியர் தின விழா மாணவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிர்வாகி தந்தை அவர்கள் சிறப்பு பரிசுகளை ஆசிரியர்களுக்கு வழங்கினார்.செப்டம்பர் 27ஆம் தேதி 6 முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்றது.இணைய வழியிலேயே கல்விகற்ற மாணவர்கள் நீண்ட கால இடைவெளிப்பின் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டாலும் ஆசிரியர்களும் மாணவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு கற்றல் -கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.அக்டோபர் 25ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் வழங்குவது குறித்து PTA செயற்குழுகூட்டம் நடைபெற்றது
அக்டோபர் 30ஆம் தேதி பள்ளிக்கு பேரிடியாக மதிப்பிற்குரிய நம் பள்ளியின் நிர்வாகி தந்தை அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்தார்கள்.6 முதல் 8 வகுப்பு மாணவர்களை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்க காத்திருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களை தந்தைக்கு மலரஞ்சலி செய்ய வைத்து நவம்பர் 1ஆம் தேதி வரவேற்றனர்.6 முதல் 12 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற தலைமை ஆசிரியை அவர்கள் அனைவரையும் சிறப்பாக வழிநடத்தி கொண்டிருந்தார்.நவம்பர் 18ஆம் தேதி முதல் இரண்டாம் இடைப்பருவத் தேர்வை தொய்வின்றி மாணவர்கள் எழுதவும் தக்க நடவடிக்கைகளை தலைமை ஆசிரியை அருட்சகோதரி அவர்கள் மேற்கொண்டுத் தேர்வை நடத்தினார். நிர்வாகி தந்தையின் அகால மரணம் ஒட்டு மொத பள்ளியையும் பெருந்துயரில் ஆழ்த்தியிருந்த வேளையில் மாணவர்களின் இளைப்பாற்றலுக்காக குழந்தைகள் தினம் நவம்பர் 14ஆம் தேதி எளிமையான முறையில் ஆசிரியர்களால் சிறப்பிக்கப்பட்டது.
நிர்வாகி தந்தையின் இறப்பால் ஏற்பட்ட பேரிழப்பால் வாடிக்கொண்டிருந்த நேரத்தில் டிசம்பர் 8ஆம் தேதி நம் பள்ளிக்கு புதிய நிர்வாகியாக அருள்முனைவர்.M.ஜான் பிரிட்டோ M.Sc.,M.Ed.,M.Th(LONDON)Ph.D(DUBLIN) அவர்கள் பொறுப்பேற்றார்கள்.பொறுப்பேற்ற முதல் நாளே “நேர்மையாய் இரு ;நேர்மையாய் செயல்படு” எனும் நேரிய கொள்கையை மாணவர்கள் மனதில் தந்தை அவர்கள் விதைத்தார்கள்.தொடர்ந்து பள்ளியின் முன்னேற்றத்திற்காக அனைவரும் இணைந்து பாடுபடுவோம் எனவும் கூறினார்.
டிசம்பர் 11ஆம் தேதி பாரதியார் பிறந்தநாளான அன்று நம் பள்ளியின் தமிழ் இலக்கிய மன்ற விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது.மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்படுத்துதல் தடுப்பு பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பள்ளியில் மாணவர்களின் சட்டம் ஒழுங்கு கடைப்பிடிப்பதில் விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்துவது தொடர்பாக நமது நிர்வாகி தந்தை அவர்களின் வழிகாட்டுதலில் டிசம்பர் 13ஆம் தேதி அன்று காவல்துணை கண்காணிப்பாளர் திரு.வினோஜ் அவர்களை அவர்களது அலுவலகத்தில் தலைமை ஆசிரியை அருட்சகோதரி அவர்கள் சந்தித்துப் பேசினார்.டிசம்பர் 15ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் ஆரம்பமானது.தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவானது மாணவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.விடுமுறைக்குப்ப்பின் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரிப்பால் அரசின் வழிகாட்டுதலின்படி ஜனவரி 3ஆம் தேதி 10,11,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி மீண்டும் தொடங்கியது. 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்றன.ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் விழா மாணவர்களின் மன மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது.தொற்று பரவல் அதிகமானதால் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் அரசால் ரத்து செய்யப்பட்டது. எனவே 6 முதல் 12 வகுப்புகள் வரை அனைவருக்கும் இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா நிர்வாகமும் ஆசிரியர்களும் இணைந்து சிறப்பாக கொண்டாடினார்கள்.